தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் நலன் காக்க, வேண்டுகோள் !

  • கொரோனா நோய் தொற்றினால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தொழில்கள் முடங்கி உள்ளமையால் அனைத்து நிறுவனங்களும் பாதிப்பினை சந்தித்துள்ளது, குறிப்பாக சிறு குறு நிறுவனங்கள் மிக அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதுபோன்ற காலகட்டங்களில் தொழிலாளர்கள் வேலை இழப்பினால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகின்றனர், இதில் தகவல் தொழில்நுட்பத் துறையும் விதிவிலக்கல்ல.
  • இந்தச் சூழலில் குறிப்பிட்ட சில பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டவிரோத ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது, உதாரணத்திற்கு காக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் மட்டும் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றது என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அனைத்து பெரு நிறுவனங்களும் இதுவரை தொடர்ச்சியாக லாபம் ஈட்டிக் கொண்டு வருவாயினை அதிகரித்துக் கொண்டே இருந்தது, தற்போது நோய் தொற்றினால் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக கடந்த இரண்டு காலாண்டுகளில் மட்டுமே சிறிது வருவாய் மற்றும் இலாப வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
  • இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது மற்றும் தொழிலாளர்களுக்கு இழைக்கும் துரோகச் செயலாகும். இந்த செயலை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
  • நிறுவனங்களின் வருவாய் குறையும் நேரங்களில் ஊழியர்களின் ஊதிய செலவுகளை குறைத்துக்கொள்ள ஏற்கனவே இருக்கும் “மாறுவிகித ஊதியம் (Variable Pay)” மற்றும் “ஊக்க ஊதியம் (Bonus)” ஆகியவைகள் குறைக்கப்பட்டோ அல்லது வழங்கப்படாமலோ நிறுவனங்கள் தொய்வான சூழ்நிலைகளை சமாளித்து வருகின்றது, ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் மொத்த ஊதியத்தில் இருந்து இது போன்று “மாறுவிகித ஊதியம்” மற்றும் “ஊக்க ஊதியம்” என்று பிரித்து வைத்திருப்பதே தொழிலில் நடக்கும் பாதகமான சூழல்களை சமாளிப்பதற்காகவே. மேலும் புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றது. இதன் மூலம் குறுகிய காலங்களில் நடைபெறும் மந்த நிலையை மிக எளிதாக பெரிய நிறுவனங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். இதற்கு மேலும் நிறுவனங்கள் எப்போதும்போல் அதிகப்படியான லாபம் ஈட்ட ஆட்குறைப்பு செய்வது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் சட்டத்திற்கு புறம்பானதுமாகும்.
  • நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய ஊழியருக்கு பணி (Project) இல்லை, ஊழியரின் திறன் (Performance) சரியில்லை, என்று போலியான காரணங்கள் கூறி தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் புறந்தள்ளி சட்டவிரோதமாக பணியிலிருந்து வெளியேற்றும் வேலையை செய்துவருகிறது. ஊழியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் கொடுக்கும்படி அவர்களின் மேலாளர்களாளும் மற்றும் மனிதவள நிர்வாகிகளாளும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர், அப்படி செய்யவில்லை எனில் ‘பணிநீக்கம் செய்து விட்டோம்’ என்று கடிதம் கொடுப்போம் அதனால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் மிரட்டப்படுகின்றனர். நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்த கொடுஞ்செயல் ஊழியர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கி ஊழியர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது.
  • ஆகவே *தமிழக அரசும், ஒன்றிய அரசும்* இதுபோன்று சட்டவிரோதமாக ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களை சுயமாக கண்டறிந்து அவர்களுக்கு கொடுக்கப்படும் வரி மற்றும் இதர சலுகைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் அந்த வேலையை இழந்த ஊதியத்துடன் பெற்று தரவேண்டும் என்று *தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை, நாம் தமிழர் கட்சி* சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர் நலன் காக்க,
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
IT Professionals Wing, Naam Tamilar Katchi.
#ITPW_NTK